மேட்டூர் அணையில் இருந்து 65,200 கனஅடி தண்ணீர் திறப்பு: பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து பவானி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து பவானி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் 65 ஆயிரத்து 200 கனஅடியும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வெள்ளமெனப் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் நேற்று மாலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றை வந்தடைந்தது. இருபுறமும் கரைகளை தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.
பவானி ஆறு
இதனால் கரையோரத்தில் தாழ்வான இடமான சோமசுந்தரம், சீனிவாசபுரம், பழைய பஸ் நிலையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் பவானி நகராட்சி ஆணையாளர் லீமா சைமன் ஆகியோர் ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேடான பகுதிகளுக்கு வந்து தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணையும் நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் அச்சம்
மேலும் தற்போது ஈரோடு மாவட்டத்தில் மழை ஓரளவு குறைந்துள்ள நிலையில் விவசாயத்திற்காக காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்ணீர் அனைத்தும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பவானி நகரத்தில் காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கொடுமுடி
இதனால் கொடுமுடி காவிரி ஆற்றிலும் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுமுடியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story