ஈரோடு காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்; கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை


ஈரோடு காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்; கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை
x
தினத்தந்தி 21 Nov 2021 3:04 AM IST (Updated: 21 Nov 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு
மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் 65 ஆயிரம் கனஅடியும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் செல்லும் காவிரி ஆறு இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது. பரந்து விரிந்து காணப்படுவதால் காவிரி ஆற்றை பார்க்கும்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக கட்டப்பட்டு உள்ள கட்டளை கதவணைகளில் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கட்டளை கதவணைகளில் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் பீறிட்டு செல்கிறது.
தடை விதிப்பு
காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதாலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டு உள்ளதாலும் ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, புகைப்படம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களுக்காக ஆற்றுக்கு செல்ல கூடாது.
சுற்றுலா தலங்கள்
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் ஆறு, வாய்க்கால்களில் குளிக்கவோ, சுற்றி பார்க்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும். மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் மலைப்பாதைகளில் போக்குவரத்து தடை ஏற்படவும், உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மலைகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இதேபோல் தொடர் மழை காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள் வெள்ளநீரில் முழ்கும் அபாயம் உள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகத்தின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Next Story