கோவை சின்னச்சாமி சாலையின் நடுவில் தடுப்பான் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


கோவை சின்னச்சாமி சாலையின் நடுவில் தடுப்பான் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2021 9:40 PM IST (Updated: 21 Nov 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

கோவை சின்னச்சாமி சாலையின் நடுவில் தடுப்பான் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

கோவை

கோவை சின்னச்சாமி ரோட்டில் தொடர் விபத்துகள் நடப்பதால் சாலையின் நடுவில் தடுப்பான்கள் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

தொடர் விபத்து

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் தொடங்கும் மேம் பாலம் பாப்பநாயக்கன்பாளையம் சின்னச்சாமி ரோட்டில் உள்ள மின்மயானம் அருகே முடிகிறது. இந்த வழியாக வரும் வாகனங்கள் வலது புறமாக திரும்பி தனலட்சுமி நகர் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றன.

 இதனால் பலர் படுகாயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையின் நடுவே தடுப்பான்கள் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல் 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் அந்தப் பகுதியில் சாலையில் திடீரென்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

டாஸ்மாக் கடைகள் 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்புகின்றன. மேலும் நவ இந்தியா சிக்னலில் இருந்து வரும் வாகனங்களும் அந்த இடத்தில் சந்திப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 

மேலும் இந்தப் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் விபத்து நடக்கிறது. எனவே டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும், என்றனர்.


Next Story