தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Nov 2021 10:01 PM IST (Updated: 21 Nov 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


சாலையின் நடுவே குழி

கோவை மாநகராட்சி 66-வது வார்டு உடையாம்பாளையம் பிர தான சாலையில் பஸ் நிறுத்தம் அருகே 4 முனை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கேபிள் தோண்ட சாலையில் குழி தோண்டப் பட்டது. ஆனால் அந்த குழி சரிவர மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மனோகரன், உடையாம்பாளையம்.

பாதியில் நிற்கும் பணி

  பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
  சுதன், பொங்காளியூர்.

சேறும் சகதியுமான ரோடு 

  கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் ஸ்ரீபதி நகர் தொடர்ச்சி உள்ளது. இங்குள்ள ரோடு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் உயர் தப்பித்துச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  குமரன், ஸ்ரீபதி நகர்.

சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு

  கோவை அருகே உள்ள மாதம்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரப் பட்டு பல நாட்கள் ஆவதால் பல இடங்களில் புதர்கள் ஆக்கிர மித்து உள்ளது. அத்துடன் சாக்கடை கழிவுநீரும் சரிவர செல்லாமல் தேங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே புதர்களை அகற்றி சாக்கடை கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அசோகன், மாதம்பட்டி.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த கேஸ் கம்பெனி பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை பழுதடைந்து உள்ளதால் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அவற்றை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
  இளவரசன், கேஸ் கம்பெனி.

மினிபஸ் இயக்க வேண்டும்

  கோவை அருகே உள்ள கூடலூர் பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை மின்பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அந்த மினிபஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
  சங்கரன், கூடலூர்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
குப்பைகள் அகற்றப்பட்டது

  கோவை கணபதி கே.ஆர்.புரம் வரதராஜ் லே-அவுட் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோன்று குவிந்து கிடந்தது. இதனால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  ஹரிகரன், கோவை.

சாலை அகலப்படுத்தப்படுமா?

  சூலூர் சந்திப்பில் இருந்து காசியண்ணன்புதூர் பிரிவு முதல் கலங்கல் பிரிவு வரையும், பாப்பம்பட்டி பிரிவு பள்ளத்து பாலம் முதல் எல். அண்டு டி பைபாஸ் சாலை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  நடராஜன், சூலூர்.

கழிவுநீரால் அவதி

  கோவை பீளமேடு திருப்பதி வெங்கடாசலபதி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீருடன் சாக்கடை தண்ணீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நீடித்து வருவ தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
  குணவேல், பீளமேடு.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை அருகே உள்ள அத்திப்பாளையம் பிரீஷ் கார்டன் பகுதியில் குப்பை மலைபோன்று தேங்கி கிடக்கிறது. அதை சுத்தம் செய்ய ஊழியர்கள் வராததால் காற்று வீசும்போது குப்பைகள் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அத்துடன் குப்பைகளில் மழைநீரும் கலந்து தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  வேலுசாமி, அத்திப்பாளையம்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

  கோவை 43-வது வார்டு திருவள்ளுவர் நகர், மணிநகர் உருமாண்டம் பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மீது வாகனங்கள் அந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்துவிட்டு செல்வதால் நடந்து செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
  விஜயராஜ், உருமாண்டம்பாளையம்.
  


Next Story