வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறை
வால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
வால்பாறையின் சிறப்பு மிக்க பருவகாலமாக திகழும் குளிர் பனிக்காலம் தொடங்கி விட்டது. தற்போது வால்பாறையில் மழை முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் மதியம் 3 மணியில் இருந்தே குளிர் நிலவ தொடங்கி உள்ளது. இதனை அனுபவிக்க ஆண்டு தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது தமிழகம், கேரளாவில் வடகிழக்கு பருவமழை குறைந்து வருவதால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் ஆழியாறு அணை, கூழாங்கல் ஆறு ஆகிய பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.
2-டோஸ் தடுப்பூசி
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2-டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குப்பைகளை சாலையோரத்தில் வீசாமல் தொட்டியில் போடுங்கள், சாலையில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.
ஆறுகளில் குளிக்க வேண்டாம்
மேலும் சுற்றுலா பயணிகள் சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள இடங்கள், வெள்ளமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, கருமலைஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
வால்பாறை நகரில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்த வேண்டும். மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள்
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் கூறுகையில், வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை பார்ப்பதற்கு வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
சாலையோரங்களில் வனவிலங்குகள் நின்றால் அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது. வனவிலங்குகளுக்கு அருகில் சென்று புகைப்படம், செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்டவற்றை முறையாக கடைப்பிடித்து, ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
Related Tags :
Next Story