கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவு
வக்கீல் கேட்ட கேள்விக்கு தகவலை வழங்காததால், கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
சாக்கடை கழிவுகள்
பெங்களூரு ஆடுகோடி பகுதியில் கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாக்கடை கழிவுகளை அங்கு பணியாற்றும் டி குரூப் ஊழியர்கள் கைகளால் அள்ளி சுத்தப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வளாகத்திற்கு சென்று ஆய்வு செய்த கர்நாடக மாநில மனித உரிமைகள் கமிஷனர் மீனா சக்சேனா இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கடந்த 2016-ம் ஆண்டு வக்கீலான சுதா கட்வா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அப்போது கர்நாடக மாநில ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக இருந்த ராம்நிவாஸ் செபட்டுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் அவரது கேள்விக்கு ராம்நிவாஸ் செபட் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் சுதா மனு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். 4 வருடங்களுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் சுதா எழுப்பிய கேள்விக்கு மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம் பதில் அளித்து இருந்தது. அதில் தவறு செய்தவர்கள் மீது ராம்நிவாஸ் செபட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுடன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு ராம்நிவாஸ் செபட் பதில் அளிக்காதது குறித்து மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் சுதா புகார் அளித்து இருந்தார்.
அந்த புகாரை விசாரித்து வந்த அந்த ஆணையத்தின் கமிஷனர் லிங்கராஜூ, ராம்நிவாஸ் செபட்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். மேலும் ராம்நிவாஸ் செபட்டின் 2 மாத சம்பளத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரத்தை பிடித்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ராம்நிவாஸ் செபட் தற்போது ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story