பவானிசாகர் அருகே பரபரப்பு மின் வேலியில் சிக்கி வாலிபர் சாவு; உடலை கிணற்றில் வீசிய விவசாயிக்கு வலைவீச்சு
பவானிசாகர் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். அவரின் உடலை கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். அவரின் உடலை கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
பவானிசாகர் அருகே உள்ளது கோடேபாளையம் கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் நட்ராஜ். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை பவானிசாகர் அருகே உள்ள குடில் நகரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி (வயது 77) என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த தோட்டத்து கிணற்றில் வாலிபர் உடல் ஒன்று மிதப்பதாக நேற்று பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் படி சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மின்வேலி
விசாரணையில் இறந்து போன வாலிபர் கோடேபாளையம் வெற்றிவேல் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மாரிச்சாமி (28). விவசாய கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ‘துரைசாமி தோட்டத்தில் பயிரிட்டு இருந்த மல்லிகைப்பூ மற்றும் மிளகாய் போன்றவற்றை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க தோட்டத்தைச் சுற்றிலும் பேட்டரியில் இயங்கும் மின்வேலி அமைத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி தேதி காலை 5 மணி அளவில் தோட்டத்தை சுற்றிப் பார்க்க துரைசாமி சென்றார். அப்போது மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி இறந்து கிடந்ததை அவர் பார்த்துள்ளார்.
கிணற்றில் வீசி
இதில் பயந்துபோன துரைசாமி மாரிச்சாமி உடலை இழுத்துச் சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாரிச்சாமியின் உடலை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விவசாயி துரைசாமியை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்வேலியில் சிக்கி இறந்த மாரிச்சாமிக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.
Related Tags :
Next Story