ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்துள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்துள்ளது.
பெண் பிணம்
ஈரோடு கே.கே. நகர் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடந்தது. பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் பெண்ணின் கழுத்தை மிதித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையாளிகளை பிடிக்க டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாளம் தெரிந்தது
இதற்கிடையில் சாக்கு மூட்டை கிடந்த இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்திருந்த சாக்கு மூட்டையை அந்த பகுதியில்வீசிச்சென்றது தெரியவந்தது.
அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவை விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அந்த பெண் கோவை மாவட்டத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பிடிபட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story