இடுப்பளவு தண்ணீரில் தெர்மாகோலை படகாக மாற்றி பயணிக்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நசரத்பேட்டை பொதுமக்கள், தெர்மாகோலை படகாக மாற்றி அதில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நசரத்பேட்டை, யமுனாநகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 15 நாட்களாக பெய்த கன மழையால் இப்பகுதியில் வீடுகளை சுற்றிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழை ஓய்ந்த பிறகும் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அந்த பகுதி பொதுமக்கள், தெர்மாகோலை படகாக மாற்றி அதில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். மழைநீர் தேங்கி இருப்பதால் இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கிறார்கள். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், மழைநீரில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பதாகவும் அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அந்த பகுதிக்கு எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடவும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை கூடுதலாக மின் மோட்டார்கள் வைத்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story