கோவைக்கு 1888 கோடியில் புதிய திட்டங்கள்
கோவைக்கு 1888 கோடியில் புதிய திட்டங்கள்
கோவை
கோவைக்கு ரூ.1,888 கோடியில் புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கம்
கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து பேசியதாவது
கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சீராக வழங்குவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கோவையில் 5 திட்ட சாலைகளை செயல்படுத்துவதற்கும், குடியிருப்பு பகுதியில் சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கோவை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெள்ளக்கிணறு, சின்ன வேடப்பட்டி, சரவணம்பட்டி புதிய பாதாள சாக்கடை திட்டம் ரூ.309 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகராட்சியின் மையப்பகுதியில் இருக்கக்கூடிய சிறைச்சாலை மாநகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும்.
காந்திபுரத்தில் அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழி பூங்கா 2 கட்டங்களாக ரூ.200 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது.
மருத்துவ ஆய்வு
கோவை மாநகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை முறையை மேலும் மேம்படுத்துவதற்கு ரூ.11 கோடியில் கூடுதல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவை மாநகர மக்களுக்கு மருத்துவ வசதிகள் அளித்திடும் வகையில் ரூ.16 கோடியில் 63 நலவாழ்வு மையங்கள் மற்றும் 3 மருத்துவ ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட இருக்கிறது.
மேலும் மாநகர பகுதிகளில் சாலை விளக்குகள் இல்லாத இடங்களில் ரூ.20 கோடியில் புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
இந்த பணிகளுக்கான அரசு ஆணைகள் விரைவில் வெளியிடப்பட்டு, அதற்கான நிதியை விரைந்து ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
சென்னை மாநகரப்பகுதி போன்றே, கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்காக கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ரூ.1,888 கோடி திட்டங்கள்
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் செம்மொழி பூங்கா, புதிய பாதாள சாக்கடை திட்டம், 5 திட்ட சாலைகள் உள்பட ரூ.1,888 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார்.
Related Tags :
Next Story