பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக குறைப்பு


பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 8:51 PM IST (Updated: 22 Nov 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ஒதப்பை தரைப்பாலம் சேதமடைந்ததால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே 3-வது நாளாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மபள்ளி அணையில் இருந்தும் ஏரிக்கு அதிக நீர்வரத்து இருந்தது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து கடந்த 18-ந் தேதி மாலை வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இதனையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 19-ந் தேதி காலை 30 ஆயிரம் கனஅடியாக உபரிநீர் திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து இரவு வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக ஏரியின் அருகே ஒதப்பையில் உள்ள தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது.

போக்குவரத்து ரத்து

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மழை குறைந்தது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை ஏரிக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 445 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 728 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் இரவு நீர்வரத்து 18 ஆயிரமாக வந்த நிலையில் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒதப்பை தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே 3-வது நாளாக நேற்றும் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வழியாக இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வரும் வாகனங்கள் இதே மார்க்கத்தில் வந்து செல்கின்றன.


Next Story