தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கதவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சவுக்கியா தேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய கணவர் ஜெயவேலன் வக்கீலாக பணியாற்றினார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து, அவர்கள் என்னுடைய கணவரை பிடித்து வைத்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். அந்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் தொகையை திரும்ப கொடுக்க முடியாமல் மனுதாரரின் கணவர் தலைமறைவாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மனுதாரர் இதை மறைத்து, கடன் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக மனுதாரர் மற்றும் அவரது கணவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத்தொகையை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் செலுத்த வேண்டும். இந்த தொகையை மனுதாரரின் கணவரை தேடுவதற்காக அமைத்து, விசாரணை நடத்திய தனிப்படை போலீசாருக்கு மதிப்பூதியமாக போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Related Tags :
Next Story