தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மணல் கடத்தல் வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மனுதாரருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் நேற்று பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்ததாவது:-
அரிய வகை கனிமங்கள்
இந்த வழக்கு விசாரணையின்போது மாவட்ட கலெக்டர் மற்றும் அணு ஆராய்ச்சித்துறை அதிகாரிகளின் பதில் மனு அடிப்படையில், மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள மணலில் 10 சதவீதம் கார்னைட், இலுமினைட், மோனசைட் போன்ற அரிய வகை கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
அந்த பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, விதிகளின்படி மேற்கண்ட கனிமங்கள் அரசுக்கு உதவும் வகையில் கையாள வேண்டும். மனுதாரர் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய கோர்ட்டு நியமித்த வக்கீல் கமிஷனர், கழுகுப்பார்வையிலான படங்கள், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்திருக்கிறார். அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவருகிறது.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
எனவே இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி இந்த கோர்ட்டு உத்தரவிடுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்த்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி விசாரிக்க வேண்டும். அப்பகுதியில் எடுக்கப்பட்ட மணல், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story