வெள்ள பாதிப்பை தடுக்க வெளிநாடுகளை போல் நவீன திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு


வெள்ள பாதிப்பை தடுக்க வெளிநாடுகளை போல் நவீன திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 23 Nov 2021 2:19 AM IST (Updated: 23 Nov 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள பாதிப்பை தடுக்க வெளிநாடுகளை போல் நவீன திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

மதுரை, 

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மொத்தம் 39 ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50 சதவீத நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படவில்லை. ஏராளமான நீர்நிலைகளில் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதுபோன்ற காரணங்களால் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் மழை நீரை கடத்துவதற்கான வடிகால் அமைத்து, அதை சேமிக்கவும் உரிய திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இந்த திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இது மிகப்பெரிய திட்டம். இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?” என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். 
பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story