தொடர் கனமழையால் சிங்காப்புரா ஏரியில் உடைப்பு; வெள்ளக்காடானது பெங்களூரு


தொடர் கனமழையால் சிங்காப்புரா ஏரியில் உடைப்பு; வெள்ளக்காடானது பெங்களூரு
x
தினத்தந்தி 22 Nov 2021 9:24 PM GMT (Updated: 22 Nov 2021 9:24 PM GMT)

பெங்களூருவில் தொடர் கனமழையால் சிங்காப்புரா ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூரு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் படகு மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

பெங்களூரு:

வடகிழக்கு பருவமழை

  வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதன் காரணமாக தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு, பெங்களூரு புறநகர் உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

  மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நிலவி வருகிறது. காலையில் மழை பொழிவு இல்லாவிட்டாலும் வானம் மப்பும்மந்தாரமுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் ஒரு வாரமாக சூரியன் வெளியில் தலைகாட்டாமல் இருந்தது.

வெள்ளக்காடானது

  இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யவில்லை. லேசான வெயில் அடித்தது. ஆனால் நள்ளிரவு நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக எலகங்கா, சிங்காப்புரா, கொடிகேஹள்ளி, டாடா நகர், ஹெப்பால், மத்திக்கெரே, ஆனேக்கல் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையால் எலகங்கா ஏரி நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. இதனால் அங்குள்ள கேந்திரிய விகார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. அங்கு வாகன நிறுத்தும் இடத்தில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த நீரில் கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. அந்த கட்டிடத்தில் மொத்தம் 603 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

  தற்போது குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் நேற்று மாலை வரை வடியவில்லை. குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியே வர முடியாமல் முடங்கினர்.

மீட்பு பணி

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், கர்நாடக தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று காலை முதல் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

  அந்தப் பகுதியில் சுமார் 150 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 ரப்பர் படகுகள், 2 டிராக்டர்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. அந்த கட்டிடத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் அந்த கட்டிடத்திற்கு மின் வினியோகம் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏரி உடைந்தது

  அதுபோல் வரதராஜநகர் அருகே சிங்காப்புரா ஏரி உள்ளது. அந்த ஏரி 66 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த ஏரி நிரம்பி இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சிங்காப்புரா ஏரியில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

  இதனால் ஏரியில் இருந்து தண்ணீரில் வெளியேறியது. அவ்வாறு வெளியேறிய தண்ணீர் ஏரியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ரோட்டில் ஆறு போல கரைபுரண்டு ஓடியது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீருடன் பாம்பு, மீன்களும் வெளியே வந்தது. ஆறுபோல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் அப்பகுதியில் இருக்கும் ரோட்டில் மக்களால் நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டனர்.

  அத்துடன் ஏரியை சுற்றி இருந்த தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர். ஏரி உடைந்து 15 மணிநேரத்திற்கு பின்பு மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் வந்து உடைப்பை சரி செய்தனர்.

விமான நிலைய சாலையில்...

  இதற்கிடையில், எலகங்காவில் பெய்த கனமழையால் கோகிலு கிராஸ் பகுதியில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் 4 முதல் 5 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

  பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று வெயில் சுள்ளென்று அடித்தது. இதனால் ஒரு வாரத்திற்கு பிறகு பல வீடுகளின் மாடிகளில் துணிகளை துவைத்து காய போட்டிருந்ததை காண முடிந்தது.

படகில் சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

எலகங்கா கேந்திரிய விகார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறுகையில், "நாங்கள் தரைதளத்தில் உள்ள வீட்டில் வசிக்கிறோம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பெய்த மழையால், நீர் வீட்டிற்குள் வந்துவிட்டது. இதனால் நாங்கள் இந்த வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் உறவினர் வீட்டிற்கு செல்கிறோம்.

இனி இங்கு தரைதளத்தில் இருக்க முடியாது. வேறு இடத்தில் வீடு பார்த்துக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு பால் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வீடுகளுக்கு மெழுகுவர்த்திகளை வழங்கினர். அதிகாரிகள் விரைந்து எங்களுக்கு உதவி செய்தனர். மேல் தளங்களில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்" என்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு படகில் சென்று மீட்பு குழுவினர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

Next Story