சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்-முற்றுகை போராட்டம்; பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு


சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்-முற்றுகை போராட்டம்; பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 22 Nov 2021 10:53 PM GMT (Updated: 22 Nov 2021 10:53 PM GMT)

சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெருந்துறை
சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
பாலியல் தொந்தரவு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அதிக அளவில் மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள். 
இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.
விசாரணை
 இதைத்தொடர்ந்து  ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, ஈரோடு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கனகேஸ்வரி, பெருந்துறை போலீஸ் உதவி சூப்பிரண்டு கவுதம் கோயல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் ஈரோடு மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து திருமலைமூர்த்தியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சிறையில் அடைப்பு
மேலும்  பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் திருமலை மூர்த்தியை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். மாணவிகள் சிலரிடமும் பெண் போலீசார் ரகசியமாக விசாரித்தார்கள்.
விசாரணையின் முடிவில் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளுக்கு பாலியல் ரீதியதாக தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு திருமலைமூர்த்தி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சாலை மறியல்
இந்தநிலையில் சீனாபுரம் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சீனாபுரம் நால்ரோடு சந்திப்பில் நேற்று காலை திரண்டார்கள். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.  இதுபற்றி தகவலறிந்த பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி, பால்சின்னச்சாமி, மற்றும் பெருந்துறை தாசில்தார் கார்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 
முற்றுகை
அப்போது போராட்டக்காரர்கள், ஆசிரியர் திருமலைமூர்த்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக ஏற்கனவே தலைமை ஆசிரியர் கணேசனிடம் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவரை கைது செய்யவேண்டும். பணியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். 
மேலும் போராட்டக்காரர்கள்  அங்கிருந்து திரண்டு பள்ளி வளாகத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தார்கள். 
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் மதியம் 12 மணி அளவில் தலைமை ஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தலைமை ஆசிரியரை கைது செய்யவேண்டும் என்று முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதையடுத்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். 
இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story