பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை- வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 ஆடுகளை கொன்ற சிறுத்தை
பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாமணி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தோட்டத்தை ஒட்டி வீடு உள்ளது. இங்குள்ள கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இ்ரவு வழக்கம்போல் கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு தூங்க சென்றார்.
நேற்று காலை 6 மணி அளவில் அவர் தூங்கி எழுந்து பார்த்தார். அப்போது ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மணி என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடும் இறந்து கிடந்தது. வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து 2 ஆடுகளையும் கடித்து குதறி கொன்றது தெரியவந்தது.
சாலை மறியல்
சிறுத்தை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விவசாயிகள் நேற்று மதியம் பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் உள்ள பசுவபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை
அப்போது விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. காவலுக்கு இருந்த 2 நாய்களில் ஒன்றை தாக்கிவிட்டு மற்றொரு நாயையும் சிறுத்தை கொன்று இழுத்து சென்றுள்ளது. எனவே சிறுத்தை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு வனத்துறையினர், ‘உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story