‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்வாரியம் விரைவான நடவடிக்கை
சென்னை செங்குன்றம் காந்தி நகர் 12-வது தெருவில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர். ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் வைக்கப்பட்டது. இதற்காக ‘தினத்தந்தி’க்கும், மின்வாரியத்துக்கும் அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து போலீசார் கவனத்துக்கு...
சென்னை புரசைவாக்கம் டவுட்டன் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவ-மாணவிகளை வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சாலையிலேயே காக்க வைக்கப்படுகிறார்கள். எனவே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினையில் போக்குவரத்து போலீசார் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள்.
தேவாலயம் எதிரே உள்ள குப்பைத்தொட்டி மாற்றப்படுமா?
சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து துர்நாற்றம் பலமாக வீசுகிறது. இதனால் ஆலயத்துக்கு வருவோர்கள் மனம் சங்கடம் அடையும் நிலை உள்ளது. அதே போன்று ஆலயத்துக்கு அருகில் ‘டாஸ்மாக்’ மதுபான கடையும் இயங்கி வருகிறது. போதை ஆசாமிகள் செயலும் அருவெறுத்தக்க வகையில் உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
-அருண், கவியரசு கண்ணதாசன் நகர்.
சைதாப்பேட்டை ரெயில் பயணிகள் விருப்பம்
வரலாற்று சிறப்புமிக்க சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர், லிப்ட், ‘எஸ்கலேட்டர்’ போன்ற வசதிகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும். நெல்லை, பொதிகை போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். இதன் மூலம் சைதாப்பேட்டை மட்டுமின்றி ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, அடையார் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் பயன் அடைவார்கள்.
-எம்.மகாராஜன், சைதாப்பேட்டை பொதுநலச்சங்கம்.
எப்போது முடியும் பணி?
சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு ஆஸ்பத்திரி அருகே தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நீண்ட நாட்களாகியும் முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இந்த பள்ளத்தில் தேங்கும் மழைநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகுகின்றன. எனவே இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாகன ஓட்டிகள்.
மாசடையும் அயப்பாக்கம் ஏரி
அம்பத்தூர் அயப்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் ஏரியில் கலக்கின்றன. மேலும் கழிவுநீரும் ஏரியில் விடப்படுகின்றன. இதனால் இந்த ஏரி அபாயகரமாக மாறி வருகிறது. மாசடைந்து காணப்படுகிறது. எனவே தமிழக அரசு சிறப்பு திட்டம் வகுத்து இந்த ஏரியை மீட்டெடுக்க வேண்டும். ஏரியை அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-அருள்தாஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர்.
சரிந்த ஏரி சுவரை சீரமைக்க வேண்டும்
பெருங்குடி குறிஞ்சி நகர் பகுதில் உள்ள ஏரியின் சுற்று சுவர் மழையின் காரணமாக சரிந்து விழுந்து விட்டது. இப்பகுதியில் இரவில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் ஏரியில் யாரேனும் தெரியாமல் தவறி விழுந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சரிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சதீஷ், பெருங்குடி.
சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும்
சென்னை வேளச்சேரி வீனஸ்காலனி 6-வது தெருவில் உள்ள சாலை மற்ற தெருக்களை விட 2 அடி தாழ்வாக போடப்பட்டுள்ளது. இதனால் லேசான மழை பெய்தாலே இப்பகுதி குளம் போன்று மாறி விடுகிறது. தொடர்கதையாக உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே இப்பகுதியில் சாலையை 2 அடி உயர்த்தி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
-என்.சண்முகம், வீனஸ்காலனி பொதுநலச்சங்கம்.
கழிவுநீர் பிரச்சினையால் அவதி
சென்னை வியாசர்பாடி ஆர்.கே.கோவில் 5-வது தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மிகுந்த அசுத்தமாக காணப்படுகிறது. சுகாதார சீர்கேடாக இருக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. இதனால் சொல்லொணத் துயரத்தை அனுபவித்து வருகிறோம்.
-ஜார்ஜ், வியாசர்பாடி
கொசுத்தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் புக்ராஜ் நகர் 5-வது தெருவில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொல்லை கொடுக்கின்றன. மேலும் கடுமையாக துர்நாற்றமும் வீசுகிறது. எனவே எங்களுடைய இன்னல்களை மாநகராட்சி அதிகாரிகள் போக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
-யஷ்வந்த், புக்ராக் நகர்
இங்கு எப்படி அமருவது?
சென்னை கிண்டி அசர்கானா பஸ் நிறுத்த நிழற்கூடையில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் இல்லாமல் உள்ளது. வெறும் கம்பிகள் மட்டும் இருப்பதால் குழந்தைகள், வயதான பயணிகள் அமர முடியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சிலர் இந்த கம்பி விளிம்பில் அமர்கின்றனர். இதனால் சிலர் வழுக்கி கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பயணிகள்.
Related Tags :
Next Story