ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் உயர்வால் காட்டன் துணி உற்பத்தி பாதிப்பு
ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் உயர்வால் காட்டன் துணி உற்பத்தி பாதிப்பு
சுல்தான்பேட்டை
ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் காட்டன் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
6 லட்சம் விசைத்தறிகள்
இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சம் விசைத்தறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் காட்டன் துணியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் துணி தேவையில் சுமார் 60 சதவீதம் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு
கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி தொழிலில் கூலி உயர்வு இன்மை போன்ற இடர்களால் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழில் தற்போது நூல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர அடிக்கடி நூல் விலை ஏற்றம், இறக்கம் காணப்படுவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விசைத்தறியாளர்களுக்கு துணி உற்பத்தி செய்ய ஜவுளி உற்பத்தியாளர்கள் போதிய அளவு நூல் கொடுக்க முடிவதில்லை எனவே விசைத்தறி தொழிலும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி உயர்வு
இந்த நிலையில், கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் காட்டன் துணிகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறி தொழில், மற்றும் துணி உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரி உயர்வால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழில், ஜி.எஸ்.டி. விரி உயர்வினால் மேலும் பாதிப்படையும் என்பதால் விசைத்தறி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலை காக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story