கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே இரும்பு உருக்காலை விவகாரம் தொடப்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகேட்பு கூட்டம்
சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி கிராமத்தில் புதிதாக தனியார் இரும்பு உருக்காலை தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. இது ரூ.13 கோடி மதிப்பில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இதற்கான சுற்றுப்புற சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி (கலால்) சுபா நந்தினி தலைமை தாங்கினார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் வக்கீல் ஈசன், பல்லடம் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் முகிலன், வாரப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, சுற்றுப்புற சூழல் மற்றும் தனியார் நிறுவனம் குறித்து காணொலி காட்சி மூலம் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டது.
புறக்கணிப்பு
தொழிற்சாலை தொடர்பாகவும் சுற்றுப்புற சூழல் குறித்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டதை கண்டித்தும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் இது சம்பந்தமான விவரங்களை தமிழில் அறிக்கையாக கொடுக்க வேண்டும் என பலர் எழுந்து நின்று திடீரென கோஷமிட்டனர். இதற்கு பதிலளிக்க இயலாமல் திணறி அதிகாரிகள் கூட்டம் முடிந்து விட்டதை தெரிவிக்க தேசிய கீதம் இசைக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆவேசமாக வெளியேறி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் கருத்து கேட்பு கூட்டம் முறையாக நடைபெறவில்லை.
கலெக்டர் கலந்துகொள்ள வேண்டும்
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:- இந்த இரும்பு உருக்காலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு இன்று (நேற்று) ரகசியமாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தமிழ் வழியில் பயின்ற எங்களுக்கு இந்த ஆலையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த புத்தகத்தை ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் தருமாறு கேட்டோம்.
ஆனால் எங்களது கருத்துகளை ஏற்காமலேயே அதிகாரிகள் ஓட்டம் பிடித்து விட்டனர். பொய்யான தகவல்களை சமர்ப்பித்து ரகசியமாக கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி முறையாக அறிவித்து நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.
மாபெரும் போராட்டம்
ஏற்கனவே பல்லடம் அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலையால் இதுவரை 13 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர். எனவே வாரப்பட்டியில் உள்ளூர் மக்களின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆய்வும் நடத்தாமல் பொய்யான தகவல்களை சமர்ப்பித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் இந்த வடமாநில ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம். ஆலை அமைய விட மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story