மழை வெள்ளத்தில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க என்ன செய்யலாம்? அதிகாரி தகவல்
மழை வெள்ளத்தில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
காலியாக காணப்பட்டால்...
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து, வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். பயிர்கள் கலைந்து திட்டுத்திட்டாக ஆங்காங்கே காலியாக காணப்பட்டால் அதே ரகத்தை கொண்டு அல்லது நட்ட குத்துகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாற்றுகள் இருப்பின் அதனை பிடுங்கி எடுத்து நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
பயிர் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் துத்தநாகம் மற்றும் தழைச்சத்து பற்றாக்குறையால் பயிர்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாறும் நிலையில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிரின் இலைகளில் படும்படியாக தெளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி
ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் போன்றவற்றுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு ஒரு இரவு முழுவதும் கலந்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இடவேண்டும்.
போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைதெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். 41-60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு சூடோமோனாஸ் 400 கிராம் (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) கைதெளிப்பான் மூலம் ஏக்கருக்கு தெளிக்க பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story