விமானம், வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்
விமானம், வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்
கோவை
விமானம் மற்றும் வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தொழில் துறையினரிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்ற முதலீட்டா ளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சாலையின இருபுறமும் பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கொடிசியா நிர்வாகிகள் வரவேற் றனர். பின்னர் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அதிக முதலீடு
மாநாட்டுக்கு தலைமை தாங்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது
5 மாதங்களில் 3 மாநாடுகளை நடத்தி தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
இங்கு பேசியவர்கள் 5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 5 மாதங்களில் சாதிக்க கூடிய அரசாக விளங்கி வருவதாக பெருமையுடன் கூறினர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் கொரோனாவை எதிர்கொண்டோம். அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம்.
தற்போது மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அரசுக்கு உள்ளது. அதையும் துரிதமாக, துல்லியமாக தமிழக அரசு எதிர்கொண்டதால் வெற்றி பெற முடிந்தது.
மக்களை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அரசாங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் செயல்பட்டால் தான் இந்த வெற்றி உறுதி செய்யப்படும். இதற்காக முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலிடம் பெறும்
மக்களை காக்கும் மகத்தான பணியில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களை தீட்டி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
சோதனையான காலத்தில் கூட தமிழகத்தில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டுவது, பேசுவது, கோரிக்கை வைப்பது என்பதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த மாநாடு ஒப்பந்தம் கையெழுத்திடும் மாநாடாக நடந்து கொண்டுள்ளது.
தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் வந்து இருப்பது பாராட்டுக்குரியது. இதற்காக தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு முதலீட் டாளர் மாநாடு, செப்டம்பர் மாதத்தில் ஒரு ஏற்றுமதியாளர்கள் மாநாடு, இப்போது இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன்.
2 மாதங்களுக்கு ஒரு மாநாட்டை நடத்தி உள்ளோம். இதே வேகத்தில் போனால் இந்தியாவில் தமிழ்நாடு நிச்சயம் முதலிடம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. இதில் யாரும் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை.
‘நம்பர் ஒன்’ முதல்-அமைச்சர்
பல மாநில முதல்-மந்திரிகளை ஒப்பிட்டு ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டனர். அதில் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக என் பெயரை அறிவித்துள்ளனர்.
இது எனக்கோ, எனது அமைச்சர்களுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொரு மக்களுக்கும் கிடைத்த பெருமையாகத்தான் நான் கருதுகிறேன்.
என்னை ‘நம்பர் ஒன்’ முதல்-அமைச்சர் என்று சொல்வதை விட, தமிழ்நாடு ‘நம்பர் ஒன்’ என்ற நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய லட்சியம் என்று குறிப்பிட விரும்புகிறேன். அதை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம்.
பரவலான வளர்ச்சியை, பார் போற்றும் வளர்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு ஏற்ப 22 மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள் ளப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் அவர்களுடைய ஊர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
முதலீடுகளை ஈர்த்துள்ளோம்
அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட மாநிலங்களுக்கான "இண்டஸ்டிரியல் பார்க் ஐ.டி. சிஸ்டம்" தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 மாதத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
இதன் மூலம் ‘தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற லட்சிய இலக்கை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
2021-22-ம் நிதியாண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு நிதிநுட்ப நகரம் அதாவது பின்டெக் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தோம்.
2022-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நகரங்களுக்குள் உலகத்தின் மையமாக மாறும் வகையில் தமிழ்நாடு நிதிநுட்ப கொள்கை என்ற பின்டெக் பாலிசி -2021 என்ற சிறப்பு கொள்கையை வெளியிட்டு இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் நிதிநுட்ப நிறுவனங்களுக்காக 10 லட்சம் சதுர அடியில் நிதி நுட்ப நகரம் ஒன்று உருவாக்கப்படும்.
அந்த நிறுவ னங்களோடு இணைந்து பணியாற்றி மேம்பட்ட சேவை வழங்கக்கூடிய வகையில் தொழில்துறை வழிகாட்டு அலுவலகத்தில் பிரத்யேக நிதிநுட்ப பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நியோ டைடல் பார்க்குகள்
கடந்த 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சென்னையில் டைடல் பார்க் திறந்து வைத்தார்.
அதை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்லும் வகையில் தமிழகத்தின் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
நமது நாட்டில் வார்ப்பு தொழிலில் கோவை மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. நிறைய தொழில்நுட்பங்களை இந்த தொழிற்சாலைகளுக்கு அளித்திடும் வகையில் ஒரு "சென்டர் ஆப் எக்ஸ்செலன்ஸ்" அமைக்கப்படும்.
சிறு நகை தொழில்கூடம்
கோவையில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நகை தொழிலை மேலும் மேம்படுத்த சிறு நகை தொழில்கூடம் அரசின் மானிய உதவியுடன் அமைக்கப்படும்.
பொள்ளாச்சி பகுதியில் ரூ.21 கோடி செலவில் தென்னை நார் பதப்படுத்தும் தொழிலுக்கான குழுமம் அமைக்கப்படும்.
வான்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த உபகரணங்களை உற்பத்தி செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இதை ஊக்குவிக்க நமது மாநிலத்தில் கோவையை ஒரு முனையமாக வைத்து வான்வெளி, பாதுகாப்பு துறை பெருவழி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடுகள்,
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த துறையில் உலக அளவில் வலுப்பெறும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
விமானம் மற்றும் வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்திக்காக பிரத்யேகமாக ஒரு தொழிற் பூங்கா கோவை மாவட்டம் சூலூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பின்னலாடை, ஜவுளி
பின்னலாடைகள், ஜவுளி தொழில்களும் நவீனப்படுத்தப்பட வேண் டும். உலக அளவில் நாம் ஏற்றுமதி செய்தாலும் நமக்கு மற்ற நாடுக ளின் போட்டியும் அதிகம் இருக்கிறது.
அதை வெல்லக்கூடிய சக்தி கொண்டதாக நம்முடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும்.
தொழில் நுட்ப ஜவுளிகள், மருத்துவ ஜவுளிகள் என்று தரம் பிரித்து உற்பத்தியை அதிகப்படுத்தவும், நவீனப்படுத்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவின் மொத்த மின்னணுவியல் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு அளித்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை போல கோவையும் மின்னணுவியல், மின்னணு வன்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளை நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும், மேலும் பலப்படுத்துங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்.டாலின் பேசினார்.
Related Tags :
Next Story