மதுரை ஐகோர்ட்டை சுற்றி தேங்கிய மழைநீரை அகற்ற கூறியும் நடவடிக்கை இல்லை-கலெக்டர்-மாநகராட்சி கமிஷனர் மீது நீதிபதிகள் அதிருப்தி
மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் தேங்கிய மழைநீரை அகற்றும்படி தெரிவித்தும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் தேங்கிய மழைநீரை அகற்றும்படி தெரிவித்தும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு
மதுரை புதுத்தாமரைப்பட்டியை சேர்ந்த ராமேசுவரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுத்தாமரைப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 6,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதை நம்பிதான் எங்கள் கிராம மக்கள் உள்ளனர். இந்த விவசாய நிலங்களுக்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியாறு-வைகை பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைக்கிறது.
தற்போது இந்த பாசன கால்வாயை மறித்து தனியார் நிறுவனத்தினர் குடியிருப்பு கட்டியுள்ளனர்.
இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர், வாய்க்கால் முழுவதையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.
அகற்றவில்லை
இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், நேரில் புகார் செய்தும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே குளங்களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டத்தின்படி, எங்கள் பகுதியில் செல்லும் பெரியாறு-வைகை பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அதிருப்தி
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, பெரியாறு-வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகைப்படங்களையும், வருவாய் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பின்னர், “கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா?” என்று கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் நிலை என்ன?
மேலும், மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்ல வழி இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் தெரிவித்தோம். போனில் தொடர்பு கொண்டும் இந்த பகுதியை கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நீதிபதிகளான நாங்கள் தெரிவித்த போதும் கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? என்பது தெளிவாகிறது. கொரோனா போன்ற தொற்று நோய்களை தேடி செல்ல வேண்டாம். இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் கூறிய நீதிபதிகள் மீண்டும் அதிருப்தி தெரிவித்தனர்.
கலெக்டர் ஆஜராக நேரிடும்
விசாரணை முடிவில், மனுதாரர் பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் ஆஜராக நேரிடும் என அரசு வக்கீலிடம் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story