ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்


ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்
x
தினத்தந்தி 23 Nov 2021 8:26 PM GMT (Updated: 23 Nov 2021 8:26 PM GMT)

ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை,

ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

வளர்ச்சி கூட்டம்

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், உலக தமிழ் சங்க கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வெங்கடேசன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்.பி.க்கள் மாணிக்கதாகூர், ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், பெரியபுள்ளான், அய்யப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
மக்களுக்கு தேவையான அனைத்து வகையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் நம்முடைய பகுதிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் நம்முடைய பகுதிகள் அனைத்து வளர்ச்சிகளையும் பெற்று தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற வேண்டும்.
 
ரூ.60 கோடியில்

சிறப்பு வாய்ந்த திட்டத்தின் மூலமாக மதுரை மாவட்ட பகுதியின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நத்தம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணி தற்போது வரை முடிவு பெறாத நிலையில் பாலத்திற்கு கீழ் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்காக சாலைகளை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழையினால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை டிசம்பர் மாதம் இறுதிக்குள் சீரமைக்கப்படும். இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட உள்ளது. மதுரை முழுமைத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

சங்க பூங்கா

கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை பொறுத்தவரை ஏறக்குறைய 90 முதல் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளது. இந்த திட்டங்களில் மிகமுக்கியமாக பெரியார் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் தேதி தந்தவுடன் பஸ் நிலையம் திறக்கப்படும். வைகை ஆற்றின் 2 கரைகளிலும் சங்க பூங்கா அமைப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கோச்சடையில் ஒரு சங்க பூங்கா அமைக்கப்படுகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.87 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story