அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்
அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்கள்.
பயிர்க்கடன்
அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற கூட்டுறவு வங்கிகள் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதில் மற்ற வங்கிகளில் தடையில்லா சான்று பெற்றுவர நிர்ப்பந்தம் செய்வதுடன் மற்ற வங்கிகளில் கணக்குகள் இல்லாதவர்கள் கூட கட்டாயம் தடையில்லா சான்று பெற்று வரவேண்டும் என கூறுவதாக தெரிகிறது.
சொத்து உரிமை சான்று
இதுகுறித்து குறிச்சியை சேர்ந்த கே.ஜி.பொன்னுசாமி என்ற விவசாயி கூறும்போது, ‘ஒரு நபருக்கு பயிர்க்கடன் 2 லட்சமும், நகைக்கடன் 1 லட்சமும் என வட்டியில்லா பயிர்க்கடன் 3 லட்சம் வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்களின் மொத்த சொத்துக்களுக்கும் உரிமை சான்று வாங்கி வரச்சொல்லி அலைக்கழிக்கிறார்கள். எனவே உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையான விவசாயிகள் பயன்பெற உதவவேண்டும்' என்றார்.
கன்னப்பள்ளியை சேர்ந்த விவசாயி மனோகரன், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மட்டுமே வரவு செலவு கணக்கு வைத்துள்ள எங்களைப்போன்ற விவசாயிகளை வட்டியில்லா விவசாய பயிர்க்கடன் பெற அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட மற்ற வங்கிகளிலும் தடையில்லா சான்று பெற்று வர சொல்வது என்ன நியாயம்?
மற்ற வங்கிகளில் எங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே தடையில்லாச் சான்று வழங்குவார்கள். வங்கிக் கணக்கு இல்லாத இடத்தில் தடையில்லா சான்று பெற வங்கிக்கு தகுந்தவாறு பணம் வசூல் செய்கின்றனர். இதனால் வட்டிக்கு இணையாக செலவாகி விடுகிறது. எனவே ஒரு சில நிபந்தனைகளை தளர்த்தி விவசாயிகளுக்கு எளிமையாக பயிர்க்கடன் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
வேதனை
விவசாயி கே.என்.சண்முகம் என்பவர் சுறும்போது, நகைக் கடனுக்காக கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றால் முறையான ஆவணங்கள் இருந்தும் தட்டிக்கழிக்க பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.
விவசாய பயிர்களுக்கு தேவையான காலங்களில் உரங்களை வழங்காமல் காலம் கடந்து கொடுப்பதால் என்ன பயன்? காலம் கடந்து கொடுக்கும் உரத்தை பெறவில்லை என்றாலும் அதற்கான மானியம் கிடைப்பதில்லை. விவசாயிகள் பயன்பெற அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் சலுகைகள் வழங்கியும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது என்று வேதனைப்பட்டார்.
Related Tags :
Next Story