ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் துறையில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; 27-ந் தேதி நடக்கிறது
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
5 ஆயிரம் பணியிடங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த முகாமில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தினர் தங்கள் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். சுமார் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் ஆலோசனை
8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் அனைத்து உயர் படிப்பு முடித்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், டிரைவர்கள், தையல் கலைஞர்கள் உள்பட வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச பயிற்சிகளுக்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர் ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் தொழில்கடன் வழிகாட்டுதல் ஆகியவையும் இந்த முகாமில் வழங்கப்படுகிறது.
அமைச்சர்
இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்-இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்த முகாமை பயன்படுத்தி தங்கள் தகுதிக்கான வேலைகளை தேர்ந்து எடுக்கலாம். தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.
முகாமில் வேலை வாய்ப்பு பெறும் அனைவருக்கும் பணி நியமன உத்தரவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்க உள்ளார்.
மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு 0424 2275860 என்ற தொலைபேசி எண், erodejobfair@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story