ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி, கோதுமை வினியோகம்- இந்திய உணவுக்கழக கோட்ட மேலாளர் தகவல்


ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி, கோதுமை வினியோகம்- இந்திய உணவுக்கழக கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2021 3:08 AM IST (Updated: 24 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி-கோதுமை வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய உணவுக்கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி-கோதுமை வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய உணவுக்கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் தெரிவித்து உள்ளார். 
இந்திய உணவு கழகம்
மத்திய அரசின் ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஐகானிக் என்ற பெயரில் வாரவிழா நடத்தப்படுகிறது. இந்திய உணவுக்கழகம் சார்பில் வார விழா ஈரோடு மத்திய சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நேற்று நடந்தது. 
விழாவில் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ., இந்திய உணவுக்கழகத்தின் கோவை கோட்ட மேலாளர் என்.ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கோட்ட மேலாளர் என்.ராஜேஷ் பேசும்போது கூறியதாவது:-
இந்திய உணவுக்கழகம் சார்பில் நாடு முழுவதும் உணவு தானியங்களை கொள்முதல் செய்து, சேமித்து வைத்து வினியோகம் செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் பொது வினியோக முறைகள், மதிய உணவு வழங்குதல், அன்னபூர்ணா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
15 லட்சம் டன்
கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 58 லட்சத்து 44 ஆயிரத்து 296 ரேஷன்கார்டுகள் உள்ள 1 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 327 பேர் பயன்பெறுகிறார்கள்.
இதேபோல் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக உணவு பாதுகாப்பு நலத்திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேஷன் கார்டு உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட 9 மாவட்டங்களில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 600 டன் அரிசியும், 37 ஆயிரத்து 688 டன் கோதுமையும் வழங்கப்பட்டது. மேலும், 2021-ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் பொது வினியோக முறை திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 69 ஆயிரத்து 937 டன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் மொத்தம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 225 டன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு உள்ளது.
வலுவூட்டப்பட்ட அரிசி
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் சார்பில் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரத்த சோகை, நுண்ணூட்ட சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இந்த அரிசியில் போலிக் அமிலம், இரும்பு சத்து, வைட்டமின் பி-12 ஆகிய நுண்ணூட்ட சத்துகள் உள்ளன. இந்த மாதத்தில் 9 மாவட்டங்களுக்கு 1,663 டன் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு கோட்ட மேலாளர் ராஜேஷ் கூறினார். கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி என்.பி.பழனிசாமி, மத்திய சேமிப்பு கிடங்கு மேலாளர்கள் ஆனந்த், கணேஷ் மற்றும் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story