பாஸ்போட்-விசா இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த வங்க தேசத்தைச்சேர்ந்த 10 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில்- பெருந்துறை கோர்ட்டு தீர்ப்பு


பாஸ்போட்-விசா இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த வங்க தேசத்தைச்சேர்ந்த 10 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில்- பெருந்துறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 9:39 PM GMT (Updated: 23 Nov 2021 9:39 PM GMT)

பாஸ்போட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த 10 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து பெருந்துறை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெருந்துறை
பாஸ்போட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த 10 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து பெருந்துறை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்...
வங்கதேசத்தைச் சேர்ந்த 10 ஆண்கள் பாஸ்போட் மற்றும் விசா இல்லாமல் பெருந்துறை பணிக்கம்பாளையத்திற்கு வந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பணிக்கம்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குடியிருந்துவரும் பகுதிக்குச்சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
கட்டிட தொழிலாளர்கள்
அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த மொய்து ரகுமான் (வயது 52), சரத் காசி (40), ரபிகுல் காசி (20), முகமது அலி (43), அகிசன்ரகுமான் (32), மொனிரூல் இஸ்லாம் (32), முகமது சபிகுல் (40), அஸ்ரப் பிசாமன் (26), அரிபுல் இஸ்லாம் (28), சபிகுல் இஸ்லாம் (41) ஆகிய 10 பேர் பாஸ்போட் மற்றும் விசா இல்லாமல் கள்ளத் தனமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரிந்தது.
அதன் பின்னர் அவர்கள் 10 பேரும் அங்கிருந்து ெரயில் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து தங்கி கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஓராண்டு ஜெயில்
இதையடுத்து போலீசார் 10 பேரையும் கைது செய்து முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்ததாக பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
கடந்த 5 மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு சபினா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த  10 பேருக்கும் தலா ஒரு வருட ஜெயில் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமாகவும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 10 பேரும் கோபி மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். 

Next Story