மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு + "||" + Public protest against demolition of occupied houses

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை


கோவை-திருச்சி ரோட்டில் ரெயின்போ காலனி முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த மேம்பாலத்திற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்கு வசதியாக சுங்கம் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த இறங்கு தளம் அமைய உள்ள இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கோவில்கள் இருந்தன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்தவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில் மீதம் உள்ள வீடுகளை இடிப்பதற்கான பணி நேற்று நடைபெற்றது. இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-


இந்த பகுதியில் 159 குடும்பங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 32 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் வசித்த வீடுகள் இடிக்கப்பட்டன. தற்போது மேலும் 42 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் சிலருக்கு எந்த இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்ற விபரம் இல்லை. இதனால் இந்த வீட்டை காலி செய்ய முடியாத நிலை உள்ளது. 

மேலும் 20 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வைத்து உள்ளவர்களுக்கு தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அதுபோன்ற நபர்களால் மாடியில் குடியிருக்க இயலாது. எனவே அதிகாரிகள் மீதம் உள்ள குடும்பங்களுக்கு, குடியிருப்புகள் ஒதுக்குவதுடன், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வைத்து உள்ளவர்களுக்கு தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக வீடு இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறும்போது, உக்கடம் பைபாஸ் சாலையில் 130 மீட்டர் தூரத்திற்கு இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இதில் 80 மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மீதம் 50 மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக மீதம் உள்ள குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குள் வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கப்படும். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று கூறினார்.