பொள்ளாச்சியில் வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்வு


பொள்ளாச்சியில் வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்வு
x
தினத்தந்தி 24 Nov 2021 9:53 PM IST (Updated: 24 Nov 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்வு

பொள்ளாச்சி

தொடர் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டதால் காய்கறி வரத்து குறைந்தது. இதனால் காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து  உள்ளனர். 

தொடர்மழை 

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு ஆனைமலை, கோமங் கலம், கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை தவிர தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. 

இங்கிருந்து கேரளாவுக்கும், உள்ளூர் தேவைக்கும் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தோட்டங்களில் காய்கறிகள் அறுவடை செய்ய முடியாமல் அழுகி விட்டன. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. 

வரத்து குறைவு

இதனால் தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து விட்டது. இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் 120 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து கேரளாவுக்கு 70 டன் வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். 

இதை தவிர உள்ளூர் சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறி வரத்து குறைந்து உள்ளது.
 
விலை உயர்வு 

தற்போது 20 சதவீத காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வரு கிறது. 80 சதவீதம் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இது போன்ற நிலை இதுவரைக்கும் இருந்ததில்லை. வெளிமாவட்டங் களில் இருந்து காய்கறிகள் வருவதில்லை. இதனால் உள்ளூர் தேவைக்கு காய்கறிகள் பற்றாக்குறையாக உள்ளது. 

இதன் காரணமாக கேரளாவுக்கு 4 டன் காய்கறிகள் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. 15 கிலோ கொண்ட 5 ஆயிரம் பெட்டிகள் வரை வந்த தக்காளி, தற்போது 500 பெட்டிகள் மட்டுமே வருகிறது. வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. மழை குறைந்து காய்கறிகள் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காய்கறிகள் விலை

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் மொத்த விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
கத்திரிக்காய் ரூ.50, தக்காளி ரூ.75, பாகற்காய் ரூ.50, முருங்கைகாய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.15 முதல் ரூ.45 வரை, பெரிய வெங்காயம் ரூ.25, கேரட் ரூ.80, உருளை கிழங்கு ரூ.30 முதல் ரூ.50 வரை, முட்டைகோஸ் ரூ.40, பீன்ஸ் ரூ.70 முதல் ரூ.85 வரை, பீட்ரூட் ரூ.45, பூசணிக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.70, வெண்டைக்காய் ரூ.35.


Next Story