தாறுமாறாக எகிறும் தக்காளி விலை


தாறுமாறாக எகிறும் தக்காளி விலை
x
தினத்தந்தி 25 Nov 2021 1:53 AM IST (Updated: 25 Nov 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தக்காளியின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது

மதுரை
தக்காளியின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
தக்காளி விலை
தமிழகத்தில் தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.20, ரூ.30-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் ஒரு கிலோ ரூ.150-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. மதுரைக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை.
மதுரையில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. சில்லரை விலையை பொறுத்தமட்டில் தக்காளியின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. 
வரத்து குறைவு
இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறுகையில், "வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு 75 சதவீத தக்காளி ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  கொண்டுவரப்படுகிறது. தற்போது அந்த மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி அழுகக்கூடிய பொருள் என்பதால், விளை நிலங்களிலேயே தக்காளி அழுகத் தொடங்கிவிடுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில், அக்டோபா் மாத தொடக்கத்தில் மொத்த விலையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது. அப்போது சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி (15 கிலோ) ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்பனையாகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகள், தினசரி சந்தைகளில் தக்காளியின் தரத்தை பொறுத்து சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. தக்காளியின் வரத்து அதிகரிக்கும் வரை அதனுடைய விலை குறைய வாய்ப்பிலை. கிட்டத்தட்ட பொங்கல் பண்டிகை வரை தக்காளியின் விலை அதிகமாகவே இருக்கும்" என்றனர்.
சமூக வலைத்தளங்கள்
சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக தக்காளி இடம் பிடித்துள்ளது. வழக்கமாக மழை காலங்களில் தக்காளியின் விலை உயரும். ஆனால், முன்பில்லாத அளவிற்கு இந்த முறை விலை அதிகரித்துள்ளது. இதனால், குடும்ப தலைவிகளோ தக்காளியை பயன்படுத்தாமல் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுஒரு புறம் இருக்க நெட்டிசன்களோ, தக்களியின் விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் ஏராளமான நகைச்சுவை மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
1 More update

Next Story