காருக்கு இன்சூரன்ஸ் தொகை தராததால் புதுமாப்பிள்ளை தற்கொலை
விபத்தில் சிக்கிய காருக்கு இன்சூரன்ஸ் தொகை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
விபத்தில் சிக்கிய காருக்கு இன்சூரன்ஸ் தொகை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமன் என்பவருடைய மகன் தங்கராமன் (வயது 35). இவருக்கு சில மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் சொந்தமாக கார் வைத்திருந்தார்.
இந்த காருக்கு இன்சூரன்ஸ் ெசலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமன் தன் உறவினர்களுடன் காரில் வெளியூருக்கு சென்றார். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் தங்கராமன் மற்றும் உறவினர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் காரும் சேதமடைந்தது.
இதுகுறித்து தங்கராமன், சம்பந்தப்பட்ட கார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம், காரின் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காலம் முடிந்து விட்டது. எனவே இழப்பீடு தொகை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த தங்க ராமன் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடிதம்
மேலும் எனது தற்கொலைக்கு, என்னை ஏமாற்றிய இன்சூரன்ஸ் நிறுவனம்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். மேலும் இதுகுறித்து வீடியோ காட்சியும் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது..
இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் தங்கராமனின் உறவினர்கள் அவரின் சாவுக்கு காரணமான இன்சூரன்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை முன்புள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உங்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story