திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் நெல் மூட்டைகளுடன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி- தொழிலாளி படுகாயம்


திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் நெல் மூட்டைகளுடன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி- தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:34 AM IST (Updated: 25 Nov 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் நெல் மூட்டைகளுடன் லாரி பாய்ந்தது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் நெல் மூட்டைகளுடன் லாரி பாய்ந்தது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். 
பள்ளத்தில் பாய்ந்தது
கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கும்பகோணத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜெயராம் (வயது 48) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப் பாதையில் லாரி வந்துெகாண்டு இருந்தது. மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. 
உயிர் தப்பினார்...
பள்ளத்தில் லாரி பாய்ந்தபோது நெல்மூட்டைகள் தூக்கி வீசப்பட்டன. 100 அடிக்கு சென்றபின்னர் ஒரு மரத்தில் மோதி லாரி நின்றது. இதில் லாரி சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜெயராம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் பயணம் செய்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஆத்தூரை சேர்ந்த நாச்சியப்பன் (40) என்பவர் படுகாயமடைந்தார். மேலும் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை உடனே  மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 
மீட்பு பணி
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
100 அடி பள்ளத்தில் கிடக்கும் லாரியையும், சிதறிய நெல் மூட்டைகளையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story