திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று தரைப்பாலம் சேதம் - பொதுமக்கள் பாதிப்பு


திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று தரைப்பாலம் சேதம் - பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 10:48 AM GMT (Updated: 25 Nov 2021 10:48 AM GMT)

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ளது வல்லிபுரம் ஊராட்சி. இந்த கிராமத்தின் எல்லையில் பாலாறு செல்கிறது. 1 கி.மீ. நீளமுள்ள இந்த சிமெண்டு தரைப்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தைத் கடந்துதான் திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தரைப்பாலத்தின் அருகிலேயே பாலாற்றுத் தடுப்பணையும் உள்ளது.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் வல்லிபுரம் தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால் இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியது. அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

இதனால் வல்லிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான வழுவதூர், ஈசூர், ஆனூர், பூதூர், விளாகம், நீலமங்கலம் உள்பட கிராம பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றுவர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானார்கள். தங்களுக்கு் தேவையான மளிகை பொருட்கள் வாங்கவும் மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமலும் மிகவும் அவதிக்குளளானார்கள். இது குறித்து தகவறிந்த மாவட்ட வருவாய்த்துறையினர், போலீஸ்துறை உயரதிகாரிகள், வேளாண்மைத் துறை என பல துறை அதிகாரிகள் நேரில் வந்து இந்த பாலாற்றின் பெரு வெள்ளத்தை பார்வையிட்டு சென்றனர்.

நேற்று காலை முதல் பாலாற்றில் வெள்ளம் வடிந்து குறைவாகவே உள்ள நிலையில் தரைப்பாலம் முழுமையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

Next Story