ஆழியாறு அணையில் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு


ஆழியாறு அணையில் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு
x
தினத்தந்தி 25 Nov 2021 2:11 PM GMT (Updated: 25 Nov 2021 2:11 PM GMT)

ஆழியாறு அணையில் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன் குஞ்சுகள்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நுண் மீன் வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. மணிமுத்தாறு, மேட்டூர், பவானியில் இருந்து நுண் மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்க்கப்படுகிறது. நுண் மீன் குஞ்சிகளை விரலிகளாக மாற்றி 10 செ.மீ. நீளத்துக்கு வளர்க்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு, நெல் தவிடு ஆகியவை மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. மீன்கள் 10 செ.மீ. வளர்ந்ததும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளில் இருப்பு வைக்க வழங்கப்படுகிறது.


அணையில் இருப்பு வைக்கப்படும் மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் அவை பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தற்போது தொடர் மழையின் காரணமாக ஆழியாறு அணை நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் மீன் குஞ்சுகளை அணையில் இருப்பு வைக்க மீன் வளர்ச்சி கழகத்தினர் முடிவு செய்து உள்ளனர். இதை தொடர்ந்து நேற்று முதல் மீன் குஞ்சுகள் அணைக்குள் விடும் பணி தொடங்கியது. கோவை விற்பனை பிரிவு மேலாளர் ஜோதிகுமார், ஆழியாறு மீன் வளர்ச்சி கழக மேலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் மீன்கள் அணையில் விடப்பட்டன. இதுகுறித்து மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:-

3½ லட்சம் இலக்கு

பவானி, மேட்டூர், மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள தாய் மீன்கள் பண்ணையில் இருந்து மிர்கால், கட்லா, ரோகு ஆகிய நுண் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன. தற்போது அவற்றை அணையில் இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 1½ லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டு உள்ளன.
60 நாட்களுக்கு பிறகு ஒரு கிலோ எடையுடைய வளர்ந்த மீன்களை பிடித்து மீன் வளர்ச்சி துறை மூலமாக பொதுமக்களின் உணவு தேவைக்கு வினியோகம் செய்யப்படும். 


மேலும் பருவகாலம் தொடங்கி உள்ளதால் மீன் குஞ்சுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் மீன்களை வாங்கி கொள்ளலாம். விவசாய பண்ணை, குட்டை, சிமெண்ட் தொட்டியில் மீன்களை வளர்க்கலாம். ஒரு மீன் குஞ்சு ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மீன் பண்ணையில் வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story