கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:27 PM GMT (Updated: 25 Nov 2021 3:27 PM GMT)

கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

துடியலூர்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழைகளை நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

காட்டு யானைகள்  

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒன்றாக இருக்கும் பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலையடிவார பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
 
இதற்கிடையே துடியலூர்  அருகே உள்ள பன்னிமடை ஊராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்  வனப்பகுதியை விட்டு 8 காட்டு யானைகள் வெளியே வந்தன. 

வாழைகள் நாசம் 

பின்னர் இந்த யானைகள் தாழியூர் பகுதியில் பிரபாகரன், வெங்க டேஷ், மணி மற்றும் குமாரசாமி ஆகியோர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. தொடர்ந்து யானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை மிதித்தும், சாப்பிட்டும் நாசப்படுத்தின. இதில் 10 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழைகள் நாசமானது.

 காலை வரை அங்கேயே முகாமிட்டு இருந்த யானைகள், அங்கு ஒரு வீட்டின் முன்பு வைத்திருந்த மின்மோட்டார் மற்றும் குழாய்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பொது மக்கள் பீதியில் உள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-  கடந்த ஒரு மாதமாக துடியலூர் அருகிலுள்ள பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போராட்டம் நடத்த முடிவு

 யானைகள் நாசப்படுத்திய வாழைகள் மட்டும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும். எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story