பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்


பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 9:02 PM IST (Updated: 25 Nov 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்

கோவை

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் ஆசிரியரை 2 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு கோவை போக்சோ கோர்ட்டு அனுமதி அளித்தது. 

மாணவி தற்கொலை

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அந்த மாணவி முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, அப்போதைய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் மீரா ஜாக்சனுக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டில் போலீசார் மனு 

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை மேற்கு மகளிர் போலீசார் போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு  நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார், உடுமலை கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை யாராவது தாக்க முயற்சிக்கலாம் என்பதால் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

2 நாள் அனுமதி 

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் காலை 11 மணிக்கு மிதுன்சக்கரவர்த்தி ஒரு வேனில் கோவை கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திடீரென்று ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். 

இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தி முகத்தை போலீசார் துணியால் மறைத்தபடி கோர்ட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள். மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை, போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

தீவிர விசாரணை 

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மிதுன் சக்கரவர்த்தி அழைத்து செல்லப்பட்டார். அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேறு எந்த மாணவிகளுக்காவது பாலியல் தொல்லை அளித்துள்ளாரா, கடைசியாக மாணவியை தொடர்பு கொண்டது எப்போது, மாணவி பலாத்காரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story