கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:35 PM GMT (Updated: 25 Nov 2021 3:35 PM GMT)

கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை

கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறி முதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கேரளாவுக்கு கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் மதுக்கரை மரப் பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

10 டன் பறிமுதல்

லாரியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் 50 கிலோ வீதம், 200 மூட்டைகளில், 10 டன் ரேஷன் அரிசி இருந்ததும், சுந்தராபுரம் பகுதியில் இருந்து, கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவரான பாலக்காடு மாவட்டம் நல்லே பிள்ளை, நீலிப்பதனை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் 5 டன் அரிசி

இதேபோன்று பீளமேடு செங்காளியப்பன் நகர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அஜித்குமார் (24), ஜெகநாதன் (49) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் கோவை மாவட்ட உணவு வினியோகத்துறை அதிகாரிகள் சிந்தாமணி புதூர், மயிலம்பாடி அருகே ஒரு வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 

அதில் இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story