தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தண்ணீர் வசதி இல்லாத கழிப்பிடம்
கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனி கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு உரிய தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் கழிப்பிடம் இருந்தும் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், கோத்தகிரி.
காட்டுப்பன்றிகள் தொல்லை
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு வளாகங்கள், மார்க்கெட் உள்பட நகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த காட்டு பன்றிகள் பொதுமக்களையும் தாக்குவதால் பொதுமக்கள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
கோபால், கோத்தகிரி.
பஸ்களில் அறிவிப்பு இல்லை
கோவையில் இருந்து பல பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பஸ்கள் எந்த பகுதிக்கு செல்கிறது என்ற அறிவிப்பு முன்பக்கம் உள்ள போர்டில் மட்டுமே உள்ளது. மற்ற இடங்களில் இல்லை. இதனால் எந்த பஸ்கள் எங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அவதியாக உள்ளது. எனவே சாதாரண பஸ்களில் அந்த பஸ் எங்கு செல்கிறது என்று எழுதப்பட்டு உள்ளதுபோன்று விரைவு பஸ்களிலும் அந்த பஸ் எங்கு செல்கிறது என்று எழுத வேண்டும்.
பாரத், வேடப்பட்டி.
நடைபாதையில் மரக்கிளைகள்
கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனி அருகே உள்ள பஸ் நிறுத்த நடைபாதையில் அந்த பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளை கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அவர்கள் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்
கண்ணன், ரெயின்போ காலனி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டன
கோவை நியூ சித்தாபுதூர் அன்னப்பூர்ணா லே-அவுட் எஸ்.எம். மினிமார்ட் எதிரே உள்ள தெருக்குள் 2 மின்விளக்குகள் ஒளிராமல் இருந்தது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ததால் தற்போது அவை ஒளிரிந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
யுவராஜ், நியூசித்தாபுதூர்.
பஸ் இயக்க வேண்டும்
கோவை வடவள்ளி அண்ணா நகரில் இருந்து கவுண்டம்பாளையம் வழியாக குறிச்சி ஹவுசிங் யூனிட் வரை 4 என் என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
அதிவேகமாக செல்லும் லாரிகள்
கோவையை அடுத்த கோவைப்புதூர், குனியமுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகள் அதிகளவில் வருகிறது. இதனால் இந்தப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், சில லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. எனவே விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே தடை செய்யப்பட்ட நேரத்தில் நகருக்குள் வரும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், கோவைப்புதூர்.
கழிவுநீரால் அவதி
கோவை காந்திமாநகரில் உள்ள போலீஸ் நிலையத்தை ஒட்டி ஒரு ஓடை செல்கிறது. இந்த ஓடையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் ஓடையில் செல்லும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அதிகளவில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. அத்துடன் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருகிறது. எனவே தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு இந்த ஓடையை தூர்வாரி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.
ராஜேஸ்வரி, காந்திமாநகர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
மேட்டுப்பாளையம் உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வருகிறார்கள். இங்கு அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் விலையைவிட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கேட்டால், சரியான பதிலை சொல்லுவது இல்லை. எனவே சரியான விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
யுவராஜ், மேட்டுப்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி 55-வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவில் வீதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இந்தப்பகுதியில் குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அவை மலைபோன்று குவிந்து கிடக்கிறது. இதனால் அருகில் செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
முத்துக்குமார், பழையூர்.
அடிப்படை வசதி
பொள்ளாச்சி பகுதியில் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் புதிதாக குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
சிவா, பொள்ளாச்சி
Related Tags :
Next Story