மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் பலத்த மழை


மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 25 Nov 2021 7:17 PM GMT (Updated: 25 Nov 2021 7:17 PM GMT)

மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது

மேலூர்
மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. 
பலத்த மழை
மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளிக்கூடங்கள் முடிந்து மழையில் நனைந்தபடியே மாணவ- மாணவிகளும் வீடுகளுக்கு சென்றனர். மேலூர் பகுதியில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் வெளியேறி நெல் பயிர்களிலும் புகுந்தன. இதனால் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலூர் பகுதியில் அழகர்மலை சரிவில் பெய்த கனமழையால் வெள்ளமாக பெருக்கெடுத்து பல்வேறு ஓடைகள் மற்றும் கால்வாய்கள் வழியே வெளியேறி வருகின்றன. மேலூர் பகுதியில் உள்ள 1,056 மானாவாரி கண்மாய்களும், பெரியாறு-வைகை பாசனத்தில் உள்ள 178 கண்மாய்களும் ஏற்கனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில் தற்போது பெய்த பலத்த மழையால் கண்மாய்களில் மறுகால் வழியாக வெளியேறி வரும் தண்ணீருடன் மழை தண்ணீரும் கூடுதலாக சேர்ந்து வயல்களில் பாய்ந்து நெற்பயிர்கள் மூழ்கி வருகின்றன. கிடாரிப்பட்டி, அ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், சுக்காம்பட்டி, மேலூர், சூரக்குண்டு, அரிட்டாபட்டி,  நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, ஆமூர், மருதூர், செம்பூர், டி.மாணிக்கம்பட்டி, திருவாதவூர், பனங்காடி, கொட்டகுடி, பதினெட்டாங்குடி, அம்பலகாரன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் மழை நீரால் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தேங்கிய தண்ணீர்
வாடிப்பட்டி பகுதியில் நேற்று காலையிலிருந்து மேகமூட்டமாக இருந்தது. பின்னர் மாலை 3 மணியிலிருந்து சாரல் மழையாக விழுந்து பலத்த மழை கொட்டத் தொடங்கியது. 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி, நிரேத்தான், போடிநாயக்கன்பட்டி, குலசேகரன்கோட்டை, பெருமாள்பட்டி, செல்வகுளம், விராலிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் விவசாய நிலங்களில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலும் தண்ணீர் தேங்கியிருந்தது.
திருமங்கலத்திலும் நேற்று மாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அழகர்கோவில், சோலைமலை முருகன் மற்றும் அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை பகுதி மற்றும் மலை அடிவாரப் பகுதி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் நேற்று மாலை பலத்தமழை பெய்தது. மேலும் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சாத்தியார் அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Next Story