மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்


மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 1:17 AM IST (Updated: 26 Nov 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனால், அந்த வழியாக 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

மதுரை
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனால், அந்த வழியாக 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடியை கடந்துதான் நெல்லை, குமரி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வருகின்ற அனைத்து வாகனங்களும் வருகின்றன. இதுபோல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் மதுரைக்கு வந்து செல்கின்றன. இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக பயணிக்கும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்குகோரி கடந்த 10 தினங்களுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் அதாவது திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முற்றுகை போராட்டம்
காலை 10 மணியளவில் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழுவினர் சுங்கச்சாவடி அருகே குவிந்தனர். பின்னர் அவர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் சுங்கச்சாவடியை உடைப்போம் என்று தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருமங்கலம் போலீசார் மற்றும்  அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் முறையிட வேண்டும், தற்காலிகமாக உள்ளூர் பகுதி மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தன்பேரில், 2 மணி நேரமாக நடைபெற்ற முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
தொடர்கதை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் சுங்கச்சாவடி ஒப்பந்தகாரர்கள் உள்ளூர் பகுதி மக்களுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படும் என கூறினர். ஆனால் உள்ளூர் மக்களுக்கு இதுவரை எந்தவித கட்டண விலக்கும் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். ஆனால் அது தீர்வு கிடைக்காத தொடர்கதையாக மாறி வருகிறது.
நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாத வாகன ஓட்டிகளிடமும்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கிராமப்புறங்களில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு வரும் வாகனங்களுக்கு கூட கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் அனைத்து விதமான வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், உள்ளூர் பகுதி மக்கள் சென்று வரும் வகையில் சர்வீஸ் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடியில் அருகே போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Next Story