பிரதமருக்கு ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதியதன் எதிரொலி; டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை - பசவராஜ் பொம்மை உத்தரவு


பிரதமருக்கு ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதியதன் எதிரொலி; டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை - பசவராஜ் பொம்மை உத்தரவு
x
தினத்தந்தி 26 Nov 2021 3:50 AM IST (Updated: 26 Nov 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதிய நிலையில், அரசு திட்ட டெண்டர் முறைகேடு குறித்து விசாரணைக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பிரதமருக்கு கடிதம்

கர்நாடகத்தில் அரசு திட்டங்களுக்கான டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசு திட்ட ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விசாரணை நடத்த உத்தரவு

கர்நாடகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் வீடுகள், விவசாய பயிர்கள் சேதமடைந்து உள்ளன. குறிப்பாக பயிர் சேதங்கள் குறித்து அரசு இயற்றியுள்ள செல்போன் செயலியில் விவரங்களை ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்தால் உடனடியாக அந்த விவசாயியின் வங்கி கணக்கில் நிவாரணத்தை வரவு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அரசு திட்ட ஒப்பந்ததாரர்கள், டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அது எங்களுக்கு வந்துள்ளது. அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியது ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் கூறிய புகாரின் அடிப்படையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு அனுமதிக்கப்பட்ட டெண்டர்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

டெண்டருக்கு அனுமதி

ஒப்பந்ததாரர்களுக்கு குறித்த காலத்தில் பணம் பட்டுவாடா செய்ய மின்னணு ரசீது முறை அறிமுகம் செய்யப்படும். மேலும் எனது தலைமையில் அரசு அமைந்த பிறகு டெண்டருக்கு அனுமதி வழங்கும் முன்பு அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அமைக்கப்படும். டெண்டர் விஷங்களில் எனது தலைமையிலான அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story