ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் பொறுப்பேற்பு- அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பேட்டி


ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் பொறுப்பேற்பு- அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2021 6:19 AM IST (Updated: 26 Nov 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.  
பணியிட மாற்றம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி வந்தால் அவர்களை உடனடியாக பணியிட மாற்ற செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையொட்டியும், தேர்தல் காரணமாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய ஆணையாளர்
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக, ஆவடி நகராட்சி இணை இயக்குனராக பணியாற்றி வந்த (நிர்வாகம்) கே.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், மின் கேபிள் பதிக்கும் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ரோடுகள் சீரமைக்கப்படும். பேரும், புகழும் கொண்டது ஈரோடு மாவட்டம். அரசியல், விவசாயம், கலாசாரம், விருந்தோம்பல் அளிப்பதில் ஈரோடு மாவட்டம் தனிச்சிறப்பு கொண்டது. இங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன். ஈரோடு மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா என்பதால் தற்போது பணிகள் சற்று மெதுவாக நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் அனைத்து பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story