சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை: அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ்


சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை: அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 Nov 2021 6:19 AM IST (Updated: 26 Nov 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் சோதனை
சத்தியமங்கலம் கோட்டூவீராம்பாளையத்தில் உள்ள பாக்கியலட்சுமி நகர் மற்றும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியில் புடவைகளை நெய்வதற்கு தேவையான நூல்களுக்கு வண்ணம்கொடுக்கும் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.
இந்த சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுகளை சாக்கடைகளில் கலந்து விட்டு விடுகிறார்கள். இந்த கழிவுநீர் பவானி ஆற்றில் சென்று கலந்து விடுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதனால் பவானி ஆறு மாசு அடைகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எச்சரிக்கை நோட்டீஸ்
அதன்பேரில் நேற்று ஈரோட்டில் இருந்து மாசுக்கட்டுப்பாடு பறக்கும் படையை சேர்ந்த பொறியாளர் வினோத்குமார், உதவியாளர்கள் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி சாயப்பட்டறைகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 10 சாயப்பட்டறைகள் முறையாக அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்து, இன்னும் ஒரு வாரத்துக்குள் முறையான அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியிட வேண்டும். நேரடியாக சாக்கடையில் கலந்து விடக்கூடாது என கூறினர். மேலும் சாயப்பட்டறைகள் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

Next Story