கணவருடன் 96 ஆயிரம் கி.மீ. நடைபயணம் செய்த காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார்- பேட்டரி 2 சக்கர வாகனம் வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
கணவருடன் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்ற காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார். தனக்கு பேட்டரியிலான இரண்டு சக்கர வாகனம் வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு
கணவருடன் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்ற காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார். தனக்கு பேட்டரியிலான இரண்டு சக்கர வாகனம் வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காந்தியவாதி தம்பதி
மதுரையைச் சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மனைவி சித்ரா. காந்தியவாதி தம்பதியான இவர்கள் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி குஜராத், பீகார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப், வாகா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 31 ஆண்டுகளாக சைக்கிள் மற்றும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 96 ஆயிரம் கிலோமீட்டர் கடந்துள்ளனர். இவர்கள் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி இந்திய சுதந்திர பவள விழாவையொட்டி சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை என்ற பெயரில் ஒரு நடைபயணத்தினை சென்னிமலையில் தொடங்கினார்கள். இந்த பயணத்தை செப்டம்பர் 11-ந் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்கத்தில் நிறைவு செய்ய முடிவு செய்திருந்தனர்.
விபத்து உடல்நிலை பாதிப்பு
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தெருநாய்கள் கடிக்க முயன்றது. இதில் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் சித்ராவுக்கு அவரது கால் மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்துவிட்டன. இதனால் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் கணவருடன் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துறை என்ற கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.
கோரிக்கை
சித்ராவால் தனியாக எழுந்து நடக்க முடியாததால் ஊன்றுகோல் உதவியுடன் அவர் எழுந்து நடக்கிறார். இதற்கு அவரது கணவரும் உதவியாக இருந்து வருகிறார். மேலும் சித்ராவுக்கு ஓடத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
இந்த காந்தியவாதி தம்பதிக்கு பல்வேறு சலுகைகள், அரசு வேலை, நிலம் போன்றவை வழங்க அரசு முன்வந்தது. எனினும் காந்திய கொள்கையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சலுகைகளை பெற அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் தனக்கு அரசு சார்பில் மருத்துவ உதவியும், பேட்டரியால் இயங்கும் இரண்டு சக்கர வாகனமும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story