பெருந்துறை அருகே பரபரப்பு; அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


பெருந்துறை அருகே பரபரப்பு; அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 26 Nov 2021 6:20 AM IST (Updated: 26 Nov 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறை
பெருந்துறை அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
அரசு பஸ் 
பவானியில் இருந்து பெருந்துறையை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்றுக் காலை சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில், அந்த பஸ் பவானி ரோடு கூரபாளையம் பிரிவு அருகே சென்றபோது அதில் ஏறி பெருந்துறை செல்வதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
ஆனால், அந்த பஸ் அங்கு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பஸ் பெருந்துறை சென்றுவிட்டு மீண்டும் பவானிக்கு காலை 9 மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருந்தது.
சிறைபிடிப்பு
கூரபாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த பகுதி பொதுமக்கள் ரோட்டின் குறுக்கே நின்று அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம், ஏன் பஸ்சை நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லவில்லை’? என்றனர்.
அதற்கு டிரைவர், ‘பஸ் சக்கரம் ஒன்று பஞ்சர் ஆனதால் நிறுத்தாமல் சென்றுவிட்டோம். இல்லை என்றால் நிறுத்தியிருப்போம். வேண்டுமென்று இதை நாங்கள் செய்யவில்லை’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அந்த பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பஸ் சுமார் 30 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story