கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46).
இவர் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் ரிக்சிதா (6).
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் தனது மகளை கல்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா அருகே வந்தபோது முன்னால் நின்றுகொண்டிருந்த வேன் கதவை திடீரென திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ் வந்த மோட்டார் சைக்கிள் அந்த கதவில் மோதியது.
இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் அவரது மகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்பு அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கல்பாக்கத்தில் உள்ள அணுசக்திதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story