காஞ்சீபுரம் பாலாற்றில் கரை ஒதுங்கிய 3 உடல்களால் பரபரப்பு - புதைக்கப்பட்ட உடல்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது


காஞ்சீபுரம் பாலாற்றில் கரை ஒதுங்கிய 3 உடல்களால் பரபரப்பு - புதைக்கப்பட்ட உடல்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது
x
தினத்தந்தி 26 Nov 2021 5:48 PM IST (Updated: 26 Nov 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பாலாற்றில் கரை ஒதுங்கிய 3 உடல்களால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவை ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் என்பதும், மண்ணில் புதைக்கப்பட்ட அவை, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதும் தெரிந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் பம்ப் ஆபரேட்டர் மற்றும் வாலிபர் என 2 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். இதுவரையிலும் அவர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. தற்போது பாலாற்றில் வெள்ளம் வடிந்துவிட்டது.

இந்தநிலையில் காஞ்சீபுரம் அருகே குருவி மலை கிராமம் பாலாற்று படுகையில் உடலில் பாலித்தீன் பை மற்றும் காடா துணிகள் சுற்றப்பட்ட நிலையில் 2 ஆண் உடல்கள் கரை ஒதுங்கி இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன், தாசில்தார் காமாட்சி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அதில் அவை, ஏற்கனவே இறந்துபோனவர்களின் உடல்கள் என்பதும், மண்ணில் புதைக்கப்பட்ட அந்த உடல்கள் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தி்ல் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியதும் தெரிந்தது. மீண்டும் அந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் ஓரிக்கை பாலாற்றின் கரையோரமும் இதேபோல் ஆண் உடல் கரை ஒதுங்கி இருந்தது. காஞ்சீபுரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், தாசில்தார் காமாட்சி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

அதில் அந்த உடல், ஓரிக்கை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த செல்வம் (40) என்பதும், ஏற்கனவே இறந்து போன அவரது உடலை ஓரிக்கை பாலாற்றின் கரையில் பாலத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டதும், தற்போது வெள்ளத்தில் அடித்து வெளியே அடித்து வரப்பட்டதும் தெரிந்தது. அவரது உடலும் மீண்டும் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

Next Story