கும்மிடிப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கும்மிடிப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 7:32 PM IST (Updated: 26 Nov 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிர் தப்பினர்.

கரும்புகை

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரில் 2 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 9 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்புறத்தில் இருந்து கரும்புகையுடன் கூடிய கருகிய வாசனை வந்தது. இதையடுத்து ரவி, காரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி அதன் பேனட்டை திறந்து பார்த்தார். அப்போது என்ஜின் அடியில் லேசாக தீப்பிடித்து எரிவது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே காரின் என்ஜினில் தண்ணீரை ரவி ஊற்றினார்.

தீப்பிடித்து எரிந்தது

இதற்கிடையில், அந்த காரில் பயணம் செய்த அனைவரும் அதில் இருந்து கீழே இறங்கினர். இந்த நிலையில், அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. என்ஜினில் இருந்த ஆயில் மற்றும் எண்ணெய் கசிவுகளால் அந்த கார் முழுமையாக கொழுந்து விட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த கவரைப்பேட்டை போலீசார், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பாதைக்கான போக்குவரத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போன நிலையில் அதிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கருப்புகையை அணைத்தனர். கார் தீயில் கருகி எலும்பு கூடு போல் காட்சியளித்தது.

போக்குவரத்து பாதிப்பு

காரை கிரேன் கொண்டு போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

காரின் முன்புறத்தில் இருந்து புகைச்சலுடன் கூடிய கருகிய வாசனை வந்ததையடுத்து காரை ஓட்டிச்சென்ற ரவி சாலையோரம் காரை நிறுத்தியதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story