தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Nov 2021 9:03 PM IST (Updated: 26 Nov 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி




கட்டுமான பணி முடிவது எப்போது?

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பஜார் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அங்கு தடுப்பு சுவர்கள் கட்டிய நிலையில் பணி தொடர்ந்து மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் மழைக்காலத்தில் பயணிகள் திறந்தவெளியில் நனைந்து கொண்டு குளிரால் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே பஸ்நிலைய கட்டுமான பணியை விரைவில் முடிக்க வேண்டும். 
நாகராஜ், நடுவட்டம்.

பராமரிப்பு இல்லாத பொது கிணறு 

பந்தலூர் தாலுகா சப்பந்தோடு குழிவயல் பகுதியில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மீது இரும்பினால் ஆன மூடி போடப்பட்டு உள்ளது. அந்த கிணறு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இரும்பு துருபிடித்து உள்ளதால், மழை பெய்யும்போது அந்த துகள்கள் கிணற்றுக்குள் விழுகிறது. அந்த தண்ணீரைதான் பொதுமக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த கிணற்றை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். 
சங்கரன், சப்பந்தோடு. 
 
சாலையில் அபாய குழி 

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர  மூடப்படவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே அபாயகரமான குழிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் அந்த குழிக்குள் தண்ணீர் நிரம்பி இருப்பதால் குழிகள் இருப்பது தெரிவது இல்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும். 
சூர்யா, குளத்துப்பாளையம். 

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பணிகள் முடிந்த இடங்களில் தடுப்பு சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தடுப்பு சுவர் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து ஒளிரும் ஸ்டிக்கர்களை அதிகாரிகள் பொருத்த வேண்டும்.
ராஜேந்திரன், பொள்ளாச்சி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
சாலையில் தேங்கிய சகதிகள் அகற்றம் 

குன்னூர் அருகே உள்ள அரவங்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலை சேறும் சகதியுமாக கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை  அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ராஜேஷ் கோபால், அரவங்காடு.

நிழற்குடை வேண்டும்

கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் 2 பகுதியிலும் நிழற்குடை இருந்தது. சாலை விரிவாக்க பணிக்காக அவை அகற்றப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் அங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலுமிச்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் 2 பக்கத்திலும் நிழற்குடை அமைக்க வேண்டும்.
வேல்பாண்டியன், மலுமிச்சம்பட்டி. 

சாலையில் மரணக்குழி

கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன் காந்திபுரத்திற்கு இடதுபுறம் திரும்பும் இடத்தில் அபாயகரமான குழி உள்ளது. இந்த குழி இருக்கும் இடத்தில் வாகன ஓட்டிகள் திடீர் பிரேக் அடிப்பதால் பின்னால் வரும் வாகனங்கள் அதன் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படுத்தும் மரணக்குழி மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜதுரை, கோவை.

உடைந்த குடிநீர் குழாய் 

கோவை குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் பிரதான சாலையில் பொதுக்குடிநீர் குழாய் உடைந்து பல நாட்கள் ஆகியும் சரிசெய்யவில்லை. இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்று வருகிறது. அத்துடன் உடைந்த குழாய் வழியாக தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
சுகந்தன், குனியமுத்தூர். 

தெருநாய்கள் தொல்லை

கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் எதிரே உள்ள தமோரசாமி லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. அத்துடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
வெங்கடேஷ், கோவை. 

மதுக்கூடமாக மாறிய கிணறு

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கர் நகரில் விநாயகர் கோவில் அருகே கிணறு உள்ளது. அதன் மீது இரும்பு கம்பிகளை கொண்டு மூடி போடப்பட்டு உள்ளது. அதன் மீது பகல் நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். இதனால் அது மதுக்கூடமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள் பயத்தில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரி, சூளேஸ்வரன்பட்டி. 

குண்டும் குழியுமான சாலை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அவினாசி பாலம் வரை செல்லும் பழைய தபால் நிலைய சாலை, சமீபத்தில் பெய்த மழை காரணமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அத்துடன் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ராஜா, கோவை.

பஸ்கள் முறையாக இயங்குமா?

கிணத்துக்கடவில் இருந்து கோவைக்கு 33 டி, 33 எச். என்ற அரசு டவுன் பஸ்கள் காலை 8.30, 8.40 மணிக்கு இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ்கள் கடந்த சில நாட்களாக சரியான நேரத்துக்கு வருவது இல்லை. இதனால் இந்த பஸ்களில் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ்களை சரியான நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஸ்தூரி, கிணத்துக்கடவு. 

சகதிகள் நிறைந்த சாலை 

கோவை ஒண்டிபுதூர் சேரன் நகர், குமரன் நகர் பகுதியில் மழை காரணமாக சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் உயர் தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் உள்ள சகதிகளை அகற்ற வேண்டும். கண்ணன், சேரன்நகர். 


Next Story